அமெரிக்காவில் மாத்திரமல்ல, முழு உலகிலுமே முக்கியமாக எதிர்பார்க்கப்படும் நாள் 08.11.2016 (செவ்வாய்க்கிழமை). அப்படி என்ன நிகழ்வு இடம்பெறப் போகிறது?
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நாளை தான் நடக்கவிருக்கின்றது. இந்த தேர்தல் முடிவில் தெரிவு செய்யப்படும் அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்துத் தான் உலகின் பல நிகழ்வுகளது நிலைப்பாடுகள் மாற்றம் காணவுள்ளன. சிலவேளை அந்த மாற்றங்கள் பல நாடுகளுக்கு சாதமாகவும் அமையலாம், பாதகமாகவும் அமையலாம்.
ஜனாபதி தேர்தல் களத்தில் ஜனநாயகக் கட்சி சார்பாக ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏதோ பரம எதிரிகள் போல ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டு, துருவங்களாக தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஒருபுறம் ஹிலரியின் மின்னஞ்சல் கசிவு விவாகாரத்தை கூறிக் கூறி அவரின் வாக்கு வங்கிகளை சிதறடிக்கும் முயற்சியில் ட்ரம்ப் முனைப்புக் காட்ட, மறுபுறம் ட்ரம்பின் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், இனங்களுக்கு எதிரான கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அவரது வாக்குவங்கிகளை தன் பக்கம் சாய்க்க ஹிலரியும் முனைப்போடு செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரது வாய்களும் நாளையுடன் மௌனம் காக்கும்.
இந்த தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்காளர்கள் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 69 சதவீதம் பேர் நிச்சயம் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைமையின் கீழ் வாக்களித்துள்ளனர். இந்த வாக்களிப்பும் ஜனாதிபதியை தெரிவு செய்வதில் காத்திரமான பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு வித்தியாசம் குறைவாக இருக்கிறது.
இந்நிலையில் இறுதிக் கட்ட பிரசார நடவடிக்கைகளில் தன்னிலை மறந்து இருவரும் ஆவேசமாக சொற்கணைகளை மட்டுமல்ல, வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
இதேவேளை இறுதியாக வெளியாகிய ‘மெக்கிளாட்சி மாரிஸ்ட்’ கருத்துக்கணிப்பு முடிவில், ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைவிட ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களான லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் கேரி ஜான்சனுக்கு 6 சதவீதமும், கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீனுக்கு 2 சதவீதமும், அரசியல் சாசன கட்சி வேட்பாளர் டேரல் கேசிலுக்கு 3 சதவீதமும் ஆதரவு உள்ளது.
இதைவிட 2 சதவீதத்தினர் யாருக்கு வாக்கு அளிப்பது என தீர்மானிக்காமல் உள்ளனர். வர்களது வாக்கும் நாளைய தேர்தலில் மிக முக்கியத்துவம் பெறும் என்பதில் ஐயமில்லை.
அனைத்து முன்னணி தேர்தல் கருத்துக்கணிப்புகளையும் ஆராய்ந்து வருகிற ‘ரியல்கிளியர் பாலிடிக்ஸ்’, குடியரசு கட்சியை விட ஜனநாயக கட்சிக்கு கூடுதலாக 1.7 சதவீத ஆதரவு இருப்பதாக கூறுகிறது.
இந்நிலையில், ஹிலாரி தனது பிரசாரத்துக்கு பாப் பாடகிகள் பியான்சே, கேத்தி பெர்ரி ஆகியோரை பயன்படுத்தி வரும் அதேவேளை, நட்சத்திர பிரசாரகர்களை நம்புவதை விட தன் குடும்பத்தவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
இந்த தேர்தலில், தேர்தல் சபையின் 538 வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறுகிறவர்தான், அமெரிக்க ஜனாதிபதி என்கின்ற உயரிய அந்தஸ்தை பெறவுள்ளதோடு, சர்வதேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபராகவும் விளங்குவார்.
இவர்கள் இருவரும் எவ்வளவு தான் மாறி மாறி சேற்றை வாரி இறைத்தாலும், நாளைய ஒருதினமே யார் இவர்களில் அமெரிக்க ஜனாதிபதி என்கின்ற அந்தஸ்தை தீர்மானிக்கவுள்ளது எனலாம்.
அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஹிலரியா? ட்ரம்பா? பொறுத்திருந்து பார்ப்போம்,
Post a Comment